ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

21-10-2018- மீனம்.

24-10-2018- மேஷம்.

26-10-2018- ரிஷபம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: சித்திரை- 3, 4, சுவாதி- 1, 2.

செவ்வாய்: அவிட்டம்- 1, 2, 3.

புதன்: விசாகம்- 3, 4.

குரு: விசாகம்- 4, அனுஷம்- 1.

சுக்கிரன்: சுவாதி- 4, 3.

சனி: மூலம்- 2.

ராகு: பூசம்- 1.

கேது: உத்திராடம்- 3.

கிரக மாற்றம்:

சுக்கிரன் வக்ரம்.

24-10-2018- விருச்சிக புதன்.

27-10-2018- கும்பச் செவ்வாய்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம்பெற்று தன் ராசியைத் தானே பார்க் கிறார். அதனால் பாக்யாதிபதி குரு 8-ல் மறைந்த தோஷம் விலகிவிடுகிறது. 5-க்குடைய சூரியன் 7-ல் நீசம் என்றாலும், செவ்வாய் உச்சம்பெற்றதாலும், சூரியனுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் அவருடன் ஆட்சி பெற்றதாலும் சூரியனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. எனவே, மனைவி, குடும்பம், மக்கள் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பாக்யாதிபதி குரு 2-ஆம் இடத்தைப் பார்ப் பதால் குடும்பத்தில் அமை தியும் ஆனந்தமும் ஏற்படுவ தோடு சுபமங்கள செலவு களுக்கும் இடமுண்டு. திருமணம், சடங்கு, பிள்ளை களின் படிப்பு, இடம், பொருள், பூமி, வாகனம் சம்பந்தமான சுபச்செலவுகளுக்கும் இடமுண்டு. 4-ல் ராகு இருப் பதால், அவரை 12-க்குடைய குரு பார்ப்பதால், 8-க்கு டைய செவ்வாயும் பார்ப் பதால் சிலர் வீடு மாறலாம். சிலர் தொழில் மாற்றத்தையும் சந்திக்கலாம். தொழில்வகையிலும் அல்லது மனைவி வகையிலும் சிலர் சுபவிரயச் செலவுகளைச் செய்ய நேரும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். அதனால் 4-ல் ராகு, 10-ல் கேது நின்ற தோஷம் விலகும்.

பரிகாரம்: பழநிமலையில் போகர் ஜீவசமாதியையும், முருகப்பெருமானையும் வழிபடவும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந் தாலும் ஆட்சிபலம் பெறுவதால் மறைவு தோஷமில்லை. 6-ஆம் இடம் என்பது தொழில் ஸ்தானமாகிய 10-ஆம் இடத்துக்கு பாக்யஸ்தானமாகும். எனவே, தொழில், வாழ்க்கை எல்லாவற்றிலும் கேடு கெடுதிக்கு இடமில்லை. என்றாலும் ரிஷப ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனி 8-ல் மறைவதால், எந்தக் காரியத்தைத் தொட்டாலும் சனி பலனாக தாமதமாக நடைபெறும். 3-ல் ராகு நிற்க, அவரை குருவும் செவ்வாயும் பார்ப்பதால் சகோதரர்கள் வகையிலும், நண்பர்கள் வகையிலும் நிதானமாக நடந்து கொள்ளவேண்டும். மனவருத்தமூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புண்டு; கவனம் தேவை, அனுசரிப்பும் தேவை. மறக்கும் மனப் பான்மையும் வேண்டும். மன்னிக்கும் மனப் பான்மையும் வேண்டும். 4-க்குடைய சூரியன் 6-ல் மறைந்து நீசபங்க ராஜயோகம் அடைவ தால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பாதிப்புக்கு இடமில்லை என்றாலும் வைத்தியச் செலவுகள் வந்து விலகும். அட்டம லாபாதிபதி குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்ப தோடு லாபஸ்தானத்தையும் பார்க்கிறார். மனைவி வகையில் எதிர்பாராத அதிர்ஷ்டமும், தனவரவும், யோகமும் எதிர்பார்க்கலாம். அர்த்தநாரீஸ்வரர்போல உங்கள் வெற்றிக்கு மனைவியின் பங்கு சமபங்காக அமையும்.

Advertisment

பரிகாரம்: சங்கரன்கோவில் அருகே பாம் பாட்டி சித்தர் ஜீவசமாதி, மதுரை திருப்பரங் குன்றம் திருக்கூடல்மலையில் சோமப்பா சுவா மிகள் ஜீவசமாதி போன்றவற்றை வழிபடவும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுவதோடு அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் சம்பந்தப்படுகிறார். 3-க்குடைய சூரியனும் நீசபங்க ராஜயோகமாக சம்பந்தப்படுகிறார். 7, 10-க்குடைய குரு 6-ல் மறைந்த தோஷம் விலகுகிறது. இதற்கு பாக்யாதிபதி சனி 7-ல் இருந்து பாக்யஸ்தானத்தைப் பார்ப்பது ஒரு காரணமாகும். அதாவது இரண்டு திரிகோண ஸ்தானமும் பலம்பெறுவதால் குருவின் மறைவுதோஷம் விலகுகிறது. குரு 6-ல் மறைந்தாலும் 10-க்குடையவராகி 10-ஆம் இடத்தையே பார்ப்பதால் தொழில், வாழ்க்கை இவற்றில் தடையில்லை; முன்னேற்றம் உண்டு. தளர்ச்சி இல்லாத முயற்சிகளில் வளர்ச்சி உண்டு. வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைக்கும் தொழில் அபிவிருத்திக்கும் சுபக்கடன் வாங்கலாம். 6-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந்தாலும் (சுயசாரம் பெறுவதாலும்) 11-ஆமிடத்தைப் பார்ப்ப தால் எதிர்பாராத அதிர்ஷ்ட யோகங் களை அடையலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் 7-ல் நிற்கும் சனி கணவன்- மனைவிக்குள் விபரீதமான பலன்களை உருவாக்கு வார். கணவன்-மனைவிக்குள் நட்பும் நல்லுறவும் இருந்தால் இருவீட்டார் வகையில் பிரச்சினைகள் எழலாம். தசாபுக்திகளை அனுசரித்துப் பரிகாரம் தேடிக்கொள்ளவும்.

Advertisment

பரிகாரம்: திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறமுள்ள ஸ்ரீஓத சுவாமிகள் என்ற சுப்பையா சுவாமிகளின் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் ராகு நிற்கிறார். அவரை செவ்வாயும், கேதுவும் பார்க்கிறார்கள். அத்துடன் குருவும் பார்க்கிறார். கடக ராசிக்கு குரு பாக்யாதிபதி; பூர்வபுண்ணிய ஸ்தானா திபதி. அவர் 5-ல் நின்று பார்ப்பதால் ராகு- கேது தோஷம் விலகுகிறது. எனவே, வாழ்க்கை, தொழில் இவற்றில் வெற்றியும் முன்னேற்றமும் அடை யலாம். மனைவி, மக்கள் வகையில் மனத்திருப் தியும், மனநிறைவும் அடையலாம். ஆடம்பரப் பொருட்கள் வகையிலும், ஆடை, அணிமணி, துணிகள் வகையிலும் அவசியமான செலவுகள் ஏற்படலாம். உடன்பிறப்புகள், உற்றார்- உறவி னர்கள் வகையில் உதவியும் ஒத்தாசையும் எதிர்பார்க்கலாம். தன்னம்பிக்கை, தைரியத்தோடு எந்தவொரு காரியத்தையும் செயல்படுத்துவதால் வெற்றி உங்களைப் பின்தொடர்ந்தே வரும். 9-க்குடைய குரு 9-ஐப் பார்க்க, 10-க்குடைய செவ்வாய் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். ஜென்ம ராகு- சித்தர்களை வழிபட்டால் நினைத்து நிறைவேறும்; கருதிய காரியங்கள் கைகூடும்; வழித்துணையாக வந்து உங்களை வழிநடத்துவார்கள். தவிர்க்கமுடியாத பயணங்களாலும் அலைச்சல்களாலும் நன்மையும் உண்டு; செலவும் உண்டு. பயனும் உண்டு; பலனும் உண்டு.

பரிகாரம்: திருவாரூரில் கமலமுனி சித்தர் ஜீவசமாதியை வழிபடவும். நாகப்பட்டினம் அருகில் வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கர் ஜீவசமாதி சென்றும் வழிபடலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

pillaiyarசிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் நீசமாக இருந்தாலும், நீசன் நின்ற ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெறுவ தாலும், கூடவே இருப்பதாலும் சூரியனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. மேலும் சூரியனுக்கு உச்ச ராசிநாதன் செவ்வாயும் ராசியைப் பார்க்கிறார். எனவே, உங்கள் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியைப் பெற்றுவிடுவீர்கள். உங்கள் வைராக்கியமும் விடாமுயற்சியும் தோல்வி யைத் துரத்தி அடித்துவிடும். 5, 8-க்கு டைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப் பதால் தொழில்துறையிலும், வாழ்க்கை அமைப்பிலும் நிம்மதியும் நிறைவும் ஏற்படும்; பிரகாசம் உண்டாகும். புதுமுயற் சிகள் எளிதாக வெற்றியடையும். வரவேண்டிய பணம், பாக்கிசாக்கிகள் வசூலாகும். எப்போதோ எங்கேயோ வாங்கிப் போட்ட காலிலி வீட்டு மனைகளும் இப்போது நல்ல விலைக்கு லாபத்தோடு விலைபோகும். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யமும் அன்பும் நல்லுறவும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் நல்லவை நிலவும். எதிலும் சுறுசுறுப் பாகவும் நம்பிக்கையோடும் செயல்பட்டு வெற்றிகளைக் குவித்து சாதனைகள் படைக்க லாம். வெளிநாட்டு வர்த்தகத் தொடர்புகள் உருவாகும். அல்லது வெளிநாட்டு நண்பர் களால் உங்களுக்கு நன்மைகள் உருவாகலாம்.

பரிகாரம்: திருவாரூர் அருகில் மடப்புரம் சென்று ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் குருவின் சாரமான விசாகத்தில் ராசிக்கு 2-ல் அமர்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் அங்கே கூடியிருப் பதோடு 12-க்குடைய சூரியனும் நீசபங்கமாக அங்கிருக்கிறார். 5, 6-க்குடைய சனி 4-ல் அமர்ந்து ஜென்ம ராசியைப் பார்க்கிறார். பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான சுபச்செலவுகள் ஏற்படும். அதற்காக சுபக்கடனும் ஏற்படும். தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் தவிர்க்க முடியாத செலவுகளும் பிரச்சினைகளும் ஏற்படலாம். 3-ல் குரு நிற்க, வீடு கொடுத்த செவ்வாய் 5-ல் உச்சம் பெற்றாலும், ராகு- கேது சம்பந்தம் பெறுவதால் சகோதரர்கள் வகையிலும், நண்பர்கள் வகையிலும் வேதனைகளையும் சோதனைகளையும் சந்திக்க நேரும். செவ்வாயும் குருவும் அவரவர் சுயசாரம் என்பதால் பாதிப்புகள் இருக்காது. சூரியனைக் கண்ட பனிபோல எல்லாம் விலகிவிடும். 5-ல் செவ்வாய், கேது, ராகு பார்வை சிலருக்கு புத்திர சோகத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு புத்திர தோஷத்தை ஏற்படுத்தலாம். ஜாதகரீதியாக தசாபுக்திக்கு ஏற்ற பரிகாரங்களைச் செய்து நிவர்த்தி தேடிக்கொள்ளலாம். கடக ராசிக்கும், மகர ராசிக்கும் ராகு- கேதுக்களுக்குள் எல்லா கிரகங்களும் அடங்குவதால் கால சர்ப்ப தோஷம் ஏற்படுவதுபோல கன்னி ராசிக்கும் காலசர்ப்ப தோஷம் ஏற்படும். அதற்கான பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.

பரிகாரம்: திருவண்ணாமலையில் சேஷாத்திரி சுவாமிகளின் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 9-க்குடைய புதனும், 11-க்குடைய சூரியனும் சம்பந்தம். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இயங்கும். 2-ல் குரு நிற்பதால் பொருளாதார நிலை மேன்மை யடையும். பல வழிகளிலும் பணவரவு வரும். வரவேண்டிய பணம் எல்லாம் வந்துசேரும். கொடுக்க வேண்டிய பாக்கிசாக்கிகளை யெல்லாம் கொடுக்கமுடியும். 2-க்குரியவர் 6-ல் மறைந்தால் உங்கள் பணம் அந்நி யரிடம் போய்ச்சேரும். 6-க்குரியவர் 2-ல் இருந்தால் அந்நியர் பணம் உங்கள் வசமாகும். 2-க்குடைய செவ்வாய் 4-ல் உச்சம் என்பதால் மண், மனை, பூமி, வீடு வகையிலும், சகோதர வகையிலும் தனலாபம் உண்டாகும். செவ்வாய் சுயசாரம் என்பதால் செவ்வாயோடு சம்பந்தப் பட்ட கேது- ராகுவின் தோஷம் விலகும். கேது நான்கிலும், ராகு 10-பத்திலும் இருப்பதால் தாயின் ஆரோக்கியம் தெளிவாகும். 10-ல் உள்ள ராகுவால் தொழில் மேன்மையடையும். அரசு, தனியார்துறையில் வேலை பார்ப் பவர்களுக்கு உயர்வும் வளர்ச்சியும் ஏற்படும். சூரியன் நீசபங்கம் என்பதால் அரசியல் வாதிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும், அரசுத் தொடர்பான தொழில்புரிகிறவர்களுக்கும் லாபமும் வெற்றியும் உண்டாகும்.

பரிகாரம்: பழநி அருகில் வைகாவூர் என்ற ஊரில் புலிப்பாணி சித்தருடைய ஜீவசமாதி உள்ளது. அங்கு சென்று வழிபடலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம். ஜென்ம ராசியில் 2, 5-க்குடைய குரு பலம். அதனால் ஏழரைச்சனி நடந்தாலும்- எந்தச் சுற்றாக இருந்தாலும் பொங்கு சனியாக செயல்படும். 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் சுற்று மங்குசனி; 30 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு இரண்டாம் சுற்று பொங்கு சனி; 60 வயதை ஒட்டியவர்களுக்கு மூன்றாம் சுற்று மரணச்சனி என்பது பொது விதி. சனி- குரு வீட்டில் இருக்க, குரு- செவ்வாய் வீட்டில் இருக்க, செவ்வாய்- சனி வீட்டில் இருப்பதால் மூவருக்கும் ஏற்படும் தொடர்பின் காரணமாக அனைவருக்கும் பொங்கு சனியாக ஏழரைச்சனி செயல்படும். ஆனால் இக்காலம் சந்திரதசையோ சந்திரபுக்தியோ நடந்தால் பலன் தராது. பாதிப்புகள் உருவாகும். சாதகமான நிலை பாதகமாக முடியும். அப்படியிருந்தால் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்யவேண்டும். ஒருமுறை ருத்ரஹோமம் செய்து ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும். அதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படாமல் தடுக்கலாம். ஒருசிலர் இடமாற்றம் செய்யலாம். ஒருசிலர் தொழிலை மாற்றி அமைக்கலாம். ஒருசிலர் வேறு வேலைக்குப் போகலாம். எது நடந்தாலும் அது நன்மையாகவே இருக்கும். குரு கடாட்சம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பரிகாரம்: மதுரை- திருப்பரங்குன்றத்தில் திருக்கூடல்மலையில் உள்ள கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைவு. ஜென்மத்தில் சனி. அதனால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல், பண வரவு- செலவுகளில் பெருந்தொகையை ஈடுபடுத்தாமல் சிறு அளவில் செயல்படுத்துவது நல்லது. குரு 1, 4-க்குடையவர் என்பதால் ஒருசிலருக்கு ஆரோக்கியத்தில் பிரச்சினை உருவாகலாம். ஒருசிலருக்கு தாய்- தந்தை உறவில் அபிப்பிராயப் பேதம் உருவாகலாம். ஒருசிலருக்கு பூமி, மனை, வாகனம் சம்பந்தமான செலவுகள் ஏற்படலாம். 10-க்குடைய புதனும், 9-க்குடைய சூரியனும் 11-ல் ஒன்றுகூடி, வீடு கொடுத்த சுக்கிரனோடு சம்பந்தப்படுவதால் தர்மகர்மாதிபதி யோகமும், லாபாதிபதி யோகமும் உண்டாகிறது. அதனால் மற்ற கிரகங்களினால் ஏற்படும் தொல்லைகளும், பிரச்சினைகளும் விலகிவிடும்; பாதிக்காது. பச்சை மிளகாயைக் கடித்தவன் உடனே தண்ணீர் குடிக்கலாம்; சர்க்கரையை வாயில் போட்டுக்கொள்ளலாம். மிளகாயின் உறைப்புக் காரம் குறைந்துவிடும். அது பரிகாரம். அதேபோல ஜென்மச்சனி, குரு மறைவு போன்ற தோஷங்கள் தர்மகர்மாதிபதி யோகத்தால் பரிகாரமாகிவிடுகிறது. குடும்பத்தில் கணவன்- மனைவி, பெற்றோர் பிள்ளைகள், உற்றார்- உறவினர் எல்லாரிடமும் அனுசரித்து நடந்து கொள்வதாலும், விட்டுக்கொடுத்துப் போவ தாலும் பிரச்சினைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம் பட்டியில் ஜோதி மௌனகுரு நிர்வாண சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசியில் 4-க்குடைய செவ்வாய் உச்சம். அவர் 4-ஆமிடத்தையே பார்க்கி றார். மகர ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. அதில் விரயச்சனி நடக்கிறது. சிலர் வாகனம் சம்பந்தமாக சுபவிரயங்களை மேற்கொள்ளலாம். தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் பூமி, வீடு, மனை வகையில் சுபமுதலீடு செய்யலாம். ஜென்மத்தில் கேது, 7-ல் ராகு இருப்பதால் குடும்பத்தில் குழப் பங்களை உருவாக்க உறவினர்கள் முயற்சிக்கலாம். அதற்கு இடம் கொடுக் காமல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். 7-ஆமிடத்தை குரு பார்ப்பதால் கருத்து வேறுபாடுகளுக்கும், பிரிவு, பிளவுகளுக்கும் இடமில்லை. விவாகரத்துக் கோரி நீதிமன்றம்போன தம்பதிகளுக்கும் மனமாற்றம் ஏற்பட்டு ஒன்றுசேரலாம். "ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்' என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். ஊடலுக்குப் பின் கூடல் இருந்தால் வாடல் தேடலாகி விடும். 10-ல் சுக்கிரன் ஆட்சி. 11-க்குடைய செவ்வாய் உச்சம். தொழில் லாபம் பெருகும். புதுமுயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோகம், வியாபாரம், ஏற்றுமதி- இறக்குமதி இவற்றில் உங்கள் முயற்சிகள் லட்சக்கணக்கான லாபங்களைத் தேடித்தரும். சிறுதுளி பெருவெள்ளம்போல சிறுசேமிப்பு சமயத்தில் கைகொடுக்கும்.

பரிகாரம்: புதுச்சேரி அடுத்து பள்ளித்தென்னல் என்ற இடத்திலுள்ள சித்தர் தட்சிணாமூர்த்தி ஜீவசமாதிக்குச் சென்று வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த குரு 10-ல் இருக் கிறார். குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 12-ல் உச்சமாகிறார். சங்கடமாக இருக்குமோ என்று சஞ்சலப்பட்ட நெஞ்சங்களுக்கு சந்தோஷம் ஏற்படுமளவு எல்லாம் இனிதாக நிறைவேறும். இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று மயங்கித் தயங்கியவர்களுக்கு மலைபோல் வரும் துன்பம் பனிபோல விலகி மகிழ்ச்சியாக அமையும். 2-ஆம் இடத்தை 2-க்குடைய குருவே பார்ப்பதால் காசு பணம், வரவு- செலவுகளில் தடையில்லை. தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் வற்றாத செல்வமும், தட்டாத நிலையும் உருவாகும். "தனம் தான்யம் பசும் பகுபுத்திர லாபம் சதசம்பத்கரம் தீர்க்க மாயுகு' என்று ஆசிர்வாதம் செய்வதற்கேற்றபடி சீரும்சிறப்பும் உண்டாகும். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றபடி மதிப்பும் மரியாதையும் பாராட்டும் உங்களைத் தேடிவரும். பட்டம், பதவி, பாராட்டுகளும் வந்துசேரும். 10-ஆம் இடத்து குரு பதவி பறிக்கும் என்பது பழமொழி என்றாலும், செவ்வாய் உச்சம் பெறுவதாலும், 11-ல் சனி நிற்பதாலும் இழந்த பதவியும் செல்வமும் மீண்டும் உருவாகும். தேக ஆரோக்கியத்தில் தெளிவான நிலை உண்டாகும்.

பரிகாரம்: பொன்னமராவதி அருகில் பனையப்பட்டி சென்று சாது புல்லான் சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும். வறுத்த கடலையை முளைக்க வைத்தவர்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 9-க்குடைய செவ்வாய் 11-ல் உச்சமாக இருக்கிறார். 10-ல் சனி திக்பலம் பெறுகிறார். 10-க்குடைய குரு 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். குருப்பெயர்ச்சி- 12 ராசிக்காரர்களில் நூறு சதவிகிதம் மீன ராசிக்கே பொற்புதையலைக் கொடுக்கும் நற்பலனாக மாறுகிறார். 8-ஆமிடத்து குரு கடந்த ஒரு வருடகாலம் விழலுக்கு இறைத்த நீராக வேதனையைத் தந்தது. இப்போது வேதனையும் விலகி விட்டது. சோதனையும் மறைந்து விட்டது. சாதனைகள் படைக்க சக்தியும் வந்துவிட்டது. அன்று கண்ட கனவு இன்று நனவாகப் போகிறது. உங்களை உதாசீனப் படுத்திய அத்தனைப்பேரும் மூக்கின்மேல் விரல்வைத்து ஆச்சரியப்படுமளவு உங்களை அதிர்ஷ்டதேவதை அரவணைத்து, ஆராதிக்கப்போகிறாள். அதிர்ஷ்டமும் யோகமும் வந்துவிட்டால் குடிசையும் கோபுரமாகிவிடும். குன்றின்மேல் ஏற்றிய தீபஒளியாகப் பிரகாசிக்கலாம். 9-ஆமிடத்து குருவும், அடுத்துவரும் 10-ஆம் இடத்து குருவும் நீங்கள் நினைத்தது எல்லாவற்றையும் சாதிக்கச் செய்வார். அதற்கேற்ற மாதிரி "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்பது போல எதையும் மிகச்சாதாரணமாகக் கருதாமல், பெரிதாக சிந்தியுங்கள்; செயல்படுங்கள். ஊற்று நீராக இல்லாமல் பொங்கும் கங்கையாக, வற்றாத ஜீவநதியாக செயல்படுங்கள். காலமும் கிரகமும் உங்களுக்குக் கைகொடுக்கும்.

பரிகாரம்: பொன்னமராவதி அருகில் செம்பூதி என்ற ஊரில் செம்பூதிச் சித்தர் என்ற சிவந்திலிங்க சுவாமிகள் தம்பதி சகிதமாக ஜீவசமாதியாக உள்ளனர். சென்று வழிபடவும்.